சிறந்த துறையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

நாமக்கல், ஆக. 19: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் உமா பேசியதாவது: கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது தனித்துவத்தையும், திறமையையும் அறிந்து சிறந்த துறையை தேர்ந்தெடுத்து படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். படிக்கும் காலத்தில் ஒற்றுமையாக இருப்பதை போல், சமுதாயத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, மாணவ, மாணவிகளின் கல்வி சிறப்பாக தொடர வேண்டுமென்று, உயர்வுக்குப் படி போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தொழிற்கல்வி நிலையங்களின் தரத்ைதயும் அவர் உயர்த்தியுள்ளார்.

மேலும், அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலம் மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருகிறார். சிறந்த துறையை தேர்வு செய்யவதற்கு ‘நான் முதல்வன் திட்டம்’ என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார். அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பயன் பெற்று, சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பின்னர், நல்லிணக்க நாள் உறுதிமொழி கலெக்டர் தலைமையில் எடுத்து கொள்ளப்பட்டது. இதனை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாநில சிறுபான்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன், மாவட்ட சிறுபான்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் சித்திக், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, பேரசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை