சின்ன மம்மியுடன் முக்கிய நிர்வாகிகள் ஓட்டலில் நடத்திய ரகசிய சந்திப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சின்ன மம்மியுடன் ஓட்டலில் ரகசிய சந்திப்பு நடந்ததாமே..’’ என ஆர்வத்தோடு கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை  கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு இடையே ஏற்பட்ட பதவி சண்டையை தனக்கு  சாதகமாக்கி கொண்ட சின்ன மம்மி ஆன்மிக பயணத்தை கைவிட்டு அரசியல்  சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்காங்க. புரம் என்று முடியும் மாவட்டத்தில், 2  நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். திண்டிவனத்தை சேர்ந்த மாஜி  மந்திரியின் மாவட்டத்தில் சின்ன மம்மிக்கு ஆதரவு அதிகம் இருப்பதால்,  சுற்றுப்பயணத்தை தீவிரமாக்கி தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்தார். நகராட்சி  அலுவலகம் பக்கத்திலுள்ள ஓட்டலில் இரவு, பகல் முழுவதும் தங்கி விட்டார்.  முன்னாள் கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகளை இரவு வரவழைத்து சந்தித்து  பேசியிருக்கிறார். பகலிலும் இந்த சந்திப்பு நீடித்தது. இதில், மாஜி  மந்திரியின் ஆதரவாளர்கள், சில ஒன்றிய செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகள்  பலரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனை, மாஜி மந்திரியின் வலதுகரமாக  செயல்பட்ட திண்டிவனம் மூன்றெழுத்துக் கொண்ட முக்கிய பிரமுகர் ஒருங்கிணைப்பு  செய்திருக்கிறாராம். இந்த சந்திப்பின் கடைசியில், எல்லாம் பொதுக்குழு  முடிவுக்கு வரட்டும்.  அப்புறம் நேரடியாக நான் களத்தில் இறங்கி அரசியல்  ஆட்டத்தை தொடங்குகிறேன், எதற்கும் கவலைப்படவேண்டாம் என்று சின்ன மம்மி  ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கி அனுப்பி வைத்திருக்காராம். நேரில்  வரமுடியாதவர்களுக்கு அங்கிருந்து போன்கால் மூலமாகவும் பேச்சு  நடத்திருக்காம். சசிகலாவின் ஆதரவாளர்கள் இந்த மாவட்டத்தில் அதிகரித்துள்ள  தகவல் மாஜி மந்திரி காதுக்கு போக, சசிகலாவை இரவில் சந்தித்தது யார் என்ற  லிஸ்டை ரெடி பண்ண சொல்லியிருக்காராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கைகள் காலியாக இருந்ததால் விரக்தியில் திரும்பினார்களாமே தாமரை தலைவர்கள்’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகம்  முழுவதும் தாமரை கட்சி சார்பில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  அந்தந்த மாவட்டத்தில் போராட்டம் நடந்ததால் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக  கலந்துகொள்ள வேண்டும் என கட்சி மேலிடத்தில் இருந்து அந்தந்த மாவட்ட  பொறுப்பாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டு இருந்தது. கடலோர மாவட்டத்தில்  மாவட்ட தலைவர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக  மாநில செயலாளர் கலந்துகொண்டார். மேலிட உத்தரவு என்பதால் கூட்டம் அதிகம்  வரும் என நினைத்து இதற்காக பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு அதற்கான  இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. ஆனால் போடப்பட்ட இருக்கையில் அமர கூட  மதியம் வரை நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த  கட்சி தலைவர்கள் மேடையிலேயே புலம்பினார்களாம். வேறு வழியின்றி வாடகையை  கொடுத்து விட்டு விரக்தியில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்களாம்’’  என்றார் விக்கியானந்தா. ‘‘குமரி மாவட்ட சேதி ஏதுமிருக்கா..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘சர்வசேத சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியின் நுழைவாயிலாக விளங்குகின்ற மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் ₹75 லட்சம் மதிப்பில் 147.60 அடி உயரத்தில் கொடிக்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டது. அதில் கடந்த 29ம் தேதி தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது. அப்போதே அவசர அவசரமாக இந்த பணியை மேற்கொள்வதாக கூறினார்கள். அதிமுக மேலவை எம்.பி.,யின் பதவிகாலம் நிறைவு பெற்ற கடைசி நாளான ஜூன் 29ம் தேதியை அதற்காக தேர்வு செய்தார்கள் என்றும் கூறினர். தமிழ்நாட்டில் இதுதான் மிக உயரமான கொடிக்கம்பம் என்று கூறி தேசிய கொடியும் ஏற்றப்பட்டது. ஆனால் மறுநாளே தேசிக்கொடி கிழிந்து பறக்க அது கீழே இறக்கப்பட்டது. குமரி மாவட்ட பகுதிகளில் வீசுகின்ற கடற்காற்றால் கொடி தாக்குபிடிக்கவில்லை. அதன்பிறகு விரைவில் ெகாடி பறக்கவிடப்படும் என்று கூறினாலும் கொடிக்கம்பம் இன்னும் காலியாகவே இருந்து வருகிறது. இதற்கு யார் பொறுப்பாளர் என்பதும் தெரியவில்லை. இது கன்னியாகுமரி நுழைவாயிலின் அடையாளமாக மாறிவிடக்கூடாது என்பது கன்னியாகுமரிவாசிகளின் ஏக்கம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மணியான மாஜி அமைச்சருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதே.. மேல் விவரம் ஏதுமுண்டா…’’ ‘‘முத்து  மாவட்டத்தில் மணியான அமைச்சருக்கு பினாமி பெயரில் ஏகப்பட்ட சொத்துகள்  இருக்கிறதாம். தமிழ்க்கடவுள் குடி கொண்டுள்ள கடலோரத்தில் சொத்துகளை  வாங்கி குவித்துள்ளாராம். அவரது பினாமிகள் பலர் குறுகிய காலத்தில்  உச்சத்தை தொட்டனராம். அதெல்லாம் வருமான வரித்துறையின் கண்ணில் இதுவரை  சிக்கவில்லையாம். அது மட்டுமல்லாது அவர் அமைச்சராக இருந்த போது கல்லா  கட்டுவதற்கு துறை சார்ந்த ‘லோக்கல்’ அதிகாரிகளையும் நியமித்திருந்தாராம்.  அந்த அதிகாரிகள் வருமானத்தை மீறி சொத்துகளை வளைத்துப் போட்டுள்ளனராம்.  சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளனராம். உள்ளூரில் வேலை பார்த்த சாதாரண  அதிகாரிக்கு குறுகிய காலத்தில் இவ்வளவு சொத்துகள் எல்லாம் எப்படி வந்தது  என வருமான வரித்துறை விசாரித்தால் பல அதிகாரிகள் சிக்குவார்களாம். முத்து  மாவட்டத்தில் பணியாற்றிய இந்த அதிகாரிகள் எல்லாம் ஆட்சி மாறப் போவது  தெரிந்தவுடன் வெளி மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடி  விட்டார்களாம். அல்வா மாநகரில் ஒரு அதிகாரி பணி ஓய்வுக்கு பின்பும்  வெயிட்டான பதவியை பெற்று பலகோடி கல்லா கட்டினாராம். ஆட்சி மாறியதும்  கிடைத்தவரை போதும் என்று பணியை உதறிவிட்டு ஒதுங்கி விட்டாராம். இதையெல்லாம்  வருமான வரித்துறை தோண்டினால் இன்னும் நிறைய சொத்துகள் வெளிவரும்  என்கிறார்கள் அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.  …

Related posts

கூட்டத்தை கூட்ட முடியாமல் தவிக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

ஆண்கள் ஜெயிலுக்கு கண்காணிப்பாளராக மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கும் லேடி ஆபீசர்ஸ் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

குக்கர் தலைவரின் மெகா பிளானுக்கு தடை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பலாப்பழக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா