சின்னசேலம் அருகே கார் விபத்து நடிகர் ஜீவா, அவரது மனைவி படுகாயம்

சின்னசேலம், செப். 12: சின்னசேலம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகர் ஜீவா, அவரது மனைவி, பைக் ஓட்டி வந்த வாலிபர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நடிகர் ஜீவாவும், அவரது மனைவியும் நேற்று சேலம் நோக்கி காரில் சென்றனர். சின்னசேலம் புறவழிச்சாலை அம்மையகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் பைக்கில் திடீரென சாலை குறுக்கே சென்றார். இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட நடிகர் ஜீவா வாலிபர் பைக் மீது மோதாமல் இருக்க காரை வலது பக்கமாக திருப்பினார். அப்போது அங்கிருந்த தடுப்பு கட்டையில் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதமானது.

மேலும் மணிகண்டன், நடிகர் ஜீவா, அவரது மனைவி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து நடிகர் ஜீவா, அவரது மனைவி ஆகிய இருவரும் உடனடியாக மாற்று கார் ஏற்பாடு செய்து அதன் மூலம் சேலம் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மணிகண்டன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய காரை மீட்டு சின்னசேலம் காவல்நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நடிகர் ஜீவா, அவரது மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்