சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழப்பைத் தடுக்க விலங்குகளுக்காக விசேஷ மேம்பாலம்

*தமிழகத்தில் முதல்முறையாக வாடிப்பட்டி அருகே அமைகிறதுமதுரை : வன விலங்குகள் சாலையைக் கடக்கும் போது, வாகனங்கள் மோதி உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், வாடிப்பட்டி அருகே மலைப்பகுதியில் விலங்குகளுக்கான சிறப்பு மேம்பாலம், தமிழகத்தில் முதல்முறையாக அமைக்கப்பட உள்ளது. ‘பாரத் மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை ரூ.555 கோடி மதிப்பீட்டில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை பாலமேடு அருகே உள்ள வகுத்தமலை வனப்பகுதியினுள் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள அரிய வகை விலங்கினங்களை பாதுகாக்கும் வகையிலும், அவை ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலைப்பகுதிக்குச் செல்லவும் 210 மீட்டர் தூரத்திற்கு இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் வனவிலங்களுக்கான மேம்பாலம் (அனிமல் பாஸ் ஓவர் பிரிட்ஜ்) அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக வனத்துறையிடம் அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை விண்ணப்பித்திருந்தது. அதற்கான அனுமதியை வனத்துறை தற்போது வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து, வனவிலங்களுக்கான மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. வன விலங்குகளுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள முதல் மேம்பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்திலேயே முதல்முறையாக வனவிலங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது குறித்து மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி டாபிலோ கூறுகையில், “விலங்குகள் கடந்து செல்வதால் ஏற்படும் மனித – மிருக மோதல்களை தவிர்க்க இப்பாலம் உதவும். இப்பாலத்தின் கீழ் சிறிய விலங்குகள் செல்ல 2.5 மீட்டர் அளவில் பாதை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. பாலத்தில் தடுப்புகள், வேலிகள் ஆகியவை அமைய உள்ளன” என்றார்….

Related posts

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு