சவுண்ட் சர்வீஸ் தொழிலாளி நாக்கை துண்டாக்கிய தம்பி வந்தவாசி அருகே பரபரப்பு மின்சாரம் தடைபட்டதை பழுது பார்த்ததில் தகராறு

வந்தவாசி, செப். 18: வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் மின்சாரம் தடை பட்டதை பழுது பார்த்ததில் ஏற்பட்ட தகராறில் சவுண்ட் சர்வீஸ் தொழிலாளியின் நாக்கை துண்டாக்கிய தம்பி மற்றும் அவரது மனைவி, தந்தையை போலீசார் தேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன்(42), திருமண விழாவிற்கு சவுண்ட் சர்வீஸ் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் இவரது தம்பி ஆனந்தன்(38) என்பவர் குடியிருந்து வருகிறார். கடந்த 14ம் தேதி அன்று இரவு 9 மணி அளவில் இவர்களது வீட்டிற்கு மட்டும் மின்சார தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆனந்தன் மின்சாரத்தை நிறுத்தி படுத்துள்ளார்.

ஒரே இணைப்பு என்பதால் முருகன் வீட்டிலும் மின் இணைப்பு நின்று உள்ளது. அப்போது அங்கு வந்த முருகனின் மைத்துனர் வேலு ஏன் உறங்கும் நேரத்தில் மின்சாரத்தை நிறுத்துகிறீர்கள் குழந்தைகள் அழுகின்றன என கேட்டாராம். இதில் இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆனந்தன் அவரது மனைவி ஜீவிதா, தந்தை ஆறுமுகம் ஆகியோர் முருகனிடம் ஏன் உனது மைத்துனரை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாய் என கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்டுள்ள தகராறில் முருகனை ஆனந்தன் வாய் மீது குத்தியதாக தெரிகிறது.

இதில் முருகனின் நாக்கு துண்டானது. காயமடைந்த முருகனை உடனடியாக உறவினர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நாக்கு ஒட்டுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து முருகனின் மனைவி அம்சவேணி கொடுத்த புகாரின் பேரில் தெள்ளார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆனந்தன், ஜீவிதா, ஆறுமுகம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி