சளி, காய்ச்சல், தொண்டை வலிக்கு இயற்கை நிவாரணம்!

நன்றி குங்குமம் டாக்டர்சமீப
காலமாக, பருவ கால மாற்றத்தால், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை
பரவலாக ஏற்பட்டுவருகிறது. அதிலும் குழந்தைகளை அதிகளவில் படாய்ப்படுத்தி
வரும் இந்த சளி காய்ச்சல் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் இயற்கை
வழிகள் என்ன என்பதை விளக்குகிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.
ராதிகா. அவை என்ன பார்ப்போம்.

பொதுவாக
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போதுதான் இதுபோன்ற சளி, காய்ச்சல்
பிரச்னைகள் ஏற்படும். அதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டினாலே
இந்த பிரச்னைகள் தாக்காமல் தற்காத்துக் கொள்ளலாம். எனவே, நாம் அன்றாடம்
பயன்படுத்தும் உணவு பொருட்கள் மூலம் இயற்கையான வழியில் எப்படி நோய்
எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஆடாதொடை :
சளி அதிகரித்து, மூச்சு விடமுடியாமல் சுவாச பிரச்னையால் அவதி
படுபவர்களுக்கு மிகவும் அருமருந்து ஆடா தொடை. அதுபோன்று நெஞ்சில் சளி
கட்டிட்டு வெளியே வராமல் இருப்பதற்கும், வறட்டு இருமல் போன்றவற்றிற்கும்
மிகவும் பயனுள்ளது ஆடாதொடை. இதனை எப்படி பயன்படுத்துவது என்றால், ஆடாதொடை
இலைகள் 4-5 எடுத்து அதனுடன் துளசி இலைகள் 10, கற்பூரவள்ளி இலைகள் 4-5
எடுத்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கசாயம் வைத்து பருகலாம்.
இவை ஒரு நபருக்கானது. ஆட்கள் அதிகம் என்றால் அளவைக் கூட்டிக்
கொள்ளலாம். அதுபோன்று சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து பொடித்து
வைத்துக் கொண்டு அதையும் ஆடாதொடை கசாயத்துடன் சேர்த்து பருகலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் இதனை கொடுக்கலாம். எவ்வளவு
சளியாக இருந்தாலும், சரி செய்து விடும். அதுபோன்று வீசிங் என்ற சுவாச
பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயன் உள்ள மருந்து. இவர்கள்
மூச்சு பயிற்சி எடுத்துக் கொள்வதும் நல்லது.பூண்டு : சிலருக்கு
தொண்டை தொற்று ஏற்பட்டு அதனால், தொண்டைவலி கடுமையாக இருக்கும். தொண்டை
புண்ணாகி எச்சில் கூட விழுங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு
மிகச் சிறந்த எளிய மருந்து என்னவென்றால் பூண்டு தான்.பூண்டை தோலுரித்து
அதனை கத்தியில் நறுக்காமல், ஸ்பூன் வைத்து நசுக்கி கொள்ள வேண்டும்.
சிறுவர்களாக இருந்தால் 2 பல் பூண்டு. பெரியவர்களாக இருந்தால் 3 பல் பூண்டு
அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அப்படியே சாப்பிட வேண்டும். சாப்பிட்டு
முடித்ததும் சிறிது நேரத்திற்கு தண்ணீர் எதுவும் குடிக்கக் கூடாது. இப்படி
சாப்பிடும் போது அது தொண்டைப் புண்ணை ஆற்றும் தன்மைக் கொண்டது. இரண்டு
முறை, மூன்று முறை எடுத்துக் கொள்ளும்போதே உங்களுக்கு நல்ல நிவாரணம்
தெரியும். டான்சில்ஸ் என்னும் தொண்டை வலிக்குக் கூட இந்த பூண்டு மருந்தை
கொடுத்து வர விரைவில் குணம் பெறலாம்.

தூதுவளை : தூதுவளை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால், சளி மற்றும், காய்ச்சல் போன்றவை அருகில் கூட நெருங்காது.

டீ அல்லது பிரஷ் ஜூஸ் :
ஜூஸ் போன்று எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள். பெரிய நெல்லிக்காய் – அரை
துண்டு, துளசி -20 இலைகள் , இஞ்சி – கால் துண்டு, எலுமிச்சை – கால் துண்டு,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி, தண்ணீர் – 150 மி.கி. சேர்த்து அரைத்து
அதனை வடிக்கட்டி குடிக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அதில்
நாட்டுச்சர்க்கரையோ, பனங்கற்கண்டோ, தேனோ சேர்த்து கொடுக்கலாம். டீ
போன்று எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள், காலையோ அல்லது இரவோ இஞ்சி – 5
கிராம் அளவுக்கு எடுத்து அதனுடன் துளசி பத்து இலைகள், மிளகு –
கால்தேக்கரண்டி, அதிமதுரப் பொடி – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால்
தேக்கரண்டி, தண்ணீர் – 250 மி.கி. சேர்த்து பாதியளவாக சுண்டும் வரை
கொதிக்க வைத்து குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

வேப்பிலை – நொச்சி இலை: சிலருக்கு
காய்ச்சல் விட்டாலும் உடதல் வலி அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். அதற்கு
தீர்வாக, வேப்பிலை, நொச்சி இலைகள் அல்லது தைல இலைகள் குளிப்பதற்காக
காய்ச்சும் வெந்நீரில் கலந்து கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து
வந்தால், உடல்வலி வெகுவாக குறையும்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related posts

பாதாம் பிசினின் நன்மைகள்!

மஞ்சள் இயற்கை 360°

பூக்களின் மருத்துவ குணங்கள்