சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் பள்ளி, கல்லூரிகளில் யோகாசன நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் 400 மாணவர்கள் அசத்தல்

கன்னியாகுமரி, ஜூன் 22: சர்வதேச யோகா தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரையில் 400 மாணவ, மாணவிகள் யோகா செய்து காட்டினர். சர்வதேச யோகா தினம் நேற்று (21ம்தேதி) கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. குமரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் தலைமையில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. புற நோயாளிகள் பிரிவில், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்தனர். யோகாசனத்தின் நன்மைகள் குறித்து நோயாளிகளுக்கு விளக்கும் வகையில், புற நோயாளிகள் பிரிவில் இந்த நிகழ்ச்சி நடந்ததாக மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறினார். உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப் சென் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் நீதிமன்றத்தில் யோகாசன நிகழ்ச்சி நடந்தன. இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். குமரி மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் யோகாசன நிகழ்ச்சிகள் நடந்தன. யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சி நடந்தன. பாரதிய ஜனதா கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் யோகான நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம், சென்னையில் உள்ள சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்எஸ்) ஆகியவை இணைந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் ‘சுய மற்றும் சமூகத்திற்கான யோகா’ என்ற பெயரில் நேற்று காலை யோகாசன நிகழ்ச்சியை நடத்தினர். காலை 6.45 மணிக்கு சென்னை சிசிஆர்எஸ் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டாக்டர் என்.ஜே. முத்துக்குமார் தீபம் ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். விவேகானந்தர் கேந்திரத்தின் துணைத் தலைவர் ஹனுமந்த ராவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் யோகாசனம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றின் செயல்விளக்கம், பிராணாயாமம் போன்றவை ஒவ்வொன்றாக இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வித்தியாலயா பள்ளி, திருநெல்வேலி சித்தா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதேபோல் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்பகுதியில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்நாடு கடற்படை பிரிவு சாரணர் இயக்கம் சார்பில் காலை 6.30 மணிக்கு யோகா நிகழ்ச்சி தொடங்கியது. கமாண்டர் எஸ் கணேஷ் பிள்ளை தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் 400 என்சிசி மாணவர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் யோகா ஆசிரியர் சஜிதா யோகா வழிகாட்டுதலை வழங்கினார். என்சிசி அதிகாரிகள் அஜாஸ், சாலமன் ஜீவா, பிரபு, சுனிதா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். கடற்படை வீரர்கள் ராகேஷ் குமார் தனேஷ், ராகுல், மகேஷ் யாதவ், சுபான்சு, கலை அரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஞ்சல் ஊழியர்கள் யோகா
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் விவேகானந்தா கேந்திரம் மற்றும் சிதறால் சமணர் மலைக்கோவிலில் ‘யோகா சுயத்திற்கும் சமூகத்திற்கும்’ என்ற கருப்பொருளின் கீழ் யோகா நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள சூரிய உதய முனையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன், டென்னிஸ்தாசன், மூத்த தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ், வாழ்க வளமுடன் யோகா மாஸ்டர் தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். சிதறால் சமணர் மலைக்கோயிலில் நடந்த யோகா பயிற்சியில் தக்கலை உப கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மனோஜ் தலைமை வகித்தார். குழித்துறை உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் கண்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை