சம்பா‌ சாகுபடி பாசனத்திற்காக கீழணை, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில், செப். 14: சம்பா சாகுபடி பாசனத்திற்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்கான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன், மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வடவாற்றில் 300 கன அடியும், வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் வினாடிக்கு 300 கன அடியும் என குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால்களில் மூலம் பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது.இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 92,854 ஏக்கர், தஞ்சை மாவட்டத்தில் 1,294 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கர் என 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோன்று, வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் தற்போது 43.95 அடி தண்ணீர் உள்ளது. ராதா மதகில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதுகுறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழணை வடக்கு பிரிவிலிருந்து வடவாறு, வடக்குராஜன் மற்றும் கஞ்சங்கொல்லை வாய்க்கால்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 92,253 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழணையின் தெற்கு பிரிவிலிருந்து தெற்கு ராஜன், குமுக்கி மண்ணியார் மற்றும் மேலராமன் வாய்க்கால்கள் மூலம் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 39,050 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழணையில் இருந்து திறக்கப்படும் நீர் அணையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதி வாய்க்கால்கள் மூலம் சென்று கடலூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 1,31,903 ஏக்கர் பயிர் சாகுபடி செய்ய பயன்படுகிறது.

வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வாய்க்கால் மூலம் நீர் பெறப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியின் 34 பாசன மதகுகள் மூலம் 44,856 ஏக்கர் விலை நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு தண்ணீர் வழங்கப்பட்டு சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் சுமார் 40,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளது. தேவையில்லாத உரங்களை விற்பனை செய்ய கூடாது என எச்சரித்துள்ளேன். நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது, என்றார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்