சசிகலாவின் வருகை எதிரொலி: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரம் ரத்து: அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

சென்னை: பெங்களூரில் இருந்து சசிகலா சென்னை திரும்புவதையடுத்து வேலூர், ராணிப்பேட்டையில் இன்று நடைபெறுவதாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு, மூன்று மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி இரண்டு கட்ட பிரசாரங்களை முடித்த நிலையில் மூன்றாவது கட்டமாக நேற்று மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், மாதவரம், பொன்னேரி தொகுதியில் பிரசாரம் செய்தார். இதையடுத்து இன்று 8ம் தேதி வேலூர், ராணிப்பேட்ைடயில் முதல்வரின் பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா இன்று பெங்களூரில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை வருகிறார். சென்னை வரும் அவருக்கு வழி நெடுகிலும் அமமுக சார்பில் வரவேற்பு அளிக்க முடிவு செய்து பெங்களூரில் இருந்து அவரது வீடு வரை 56 இடங்களில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 8ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளை அந்த மாவட்ட நிர்வாகிகள் செய்த நிலையில் இன்று சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும் வழியில் தான் முதல்வர் பிரசாரம் செய்யும் பகுதியான வேலூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகள் உள்ளதால் பிரசாரம் நடைபெறும் பகுதிகளில் சசிகலாவை நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அது மட்டுமல்லாது சசிகலாவை வரவேற்க அமமுக நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதைப் போன்று முதல்வர் பிரசாரத்திற்கும் அதிமுக சார்பில் ஏற்பாடு ெசய்யப்படுள்ளது. பேனர், போஸ்டர் மற்றும் களப்பணிகளில் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி இன்று வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் நடைபெற இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு