சங்கராபுரம் சபரி நகரில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் ஊராட்சி தலைவர் தகவல்

 

காரைக்குடி, மே 3: சங்கராபுரம் சபரி நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி ஆய்வு மேற்கொண்டார். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சபரி நகர் பகுதி. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் இல்லை. சாலை வசதிகளும் முழுமையாக இல்லை. இதனால் காலியிடங்கள் முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களும் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சபரி நகர் பகுதியில் ஊராட்சி தலைவர் தேவிமாங்குடி ஆய்வு செய்தார். ஆய்வின் போது வார்டு உறுப்பினர்கள் கணபதி, தெரசா, விவேக் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘காலி பிளாட்டுகளில் கூட கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலையிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகின்றன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். ஊராட்சி தலைவர் தேவிமாங்குடி கூறுகையில், ‘‘நான் பதவியேற்று இரண்டரை மாதங்கள் தான் ஆகிறது.

இந்த இரண்டரை மாதத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என கிராமசபை கூட்டம் மற்றும் நேரடியாக இப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதன்படி களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ நிதி பெற்று போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். கழிவுநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கழிவுநீரை வெளியே விடாமல் கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைத்து அதில் விட வேண்டும்’’ என்றார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்