கோவை பகுதிகளில் பிரதமர் திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரை வங்கிக்கடன் தருவதாக கூறி மோசடி!

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் சோமனூர் பகுதிகளில் ஒரு சதவீத வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பாஜவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பிரதமரின் முத்ரா திட்டத்தில் வங்கியில் தனி நபர் கடனாக 60 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.10 லட்சம் வரை ஒரு சதவீத வட்டியில் தருவதாகவும், அதற்காக ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கும்படி தகவல் பரவியது. இந்த பதிவு பாஜவினரின் வாட்ஸ் அப் குரூப்களில் பரவியது. இதை உண்மை என நம்பி பல்வேறு குரூப்களில் இந்த தகவல் பகிரப்பட்டது. இதை நம்பி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியை சேர்ந்த பலரும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து, பணம் செலுத்தினர். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது முதலில் ரூ.850 பிராசஸிங் கட்டணம் என்றும், அதை செலுத்தியதும் அப்ரூவல் லெட்டர் வந்த பின்பு ரூ.5,500 அனுப்ப வேண்டும் என்றும் ஒரு பெண் அழைத்து பேசி வந்தார். ஒரு கட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அழைத்த செல்போன் எண்கள் குறித்து கேட்டபோது அவை போலியானது என்பது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட கருமத்தம்பட்டியை சேர்ந்த அசோக்குமார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், ‘‘பிரதமரின் முத்ரா கடன் திட்ட மோசடியில் பாஜவை சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர சமூக வலைதளங்களில் பரவி வரும் 2 மொபைல் எண்களையும் யாரும் பார்வேர்ட் செய்ய வேண்டாம்’’ என்றார்….

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்