கோவை நகை பட்டறையில் 1 கிலோ தங்க கட்டி கொள்ளை

கோவை: கோவை நகை பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டியை கொள்ளை அடித்து சென்ற வடமாநில ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை வெரைட்டிஹால் ரோடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் (45). இவர் ம.ந.க வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன் தினம் மோகன் குமார் தங்க நகை பட்டறையை மூடி விட்டு சென்றார். கடையின் சாவியை பக்கத்து அறையில் வசித்து வந்த தனது பட்டறை தொழிலாளியான நோவா என்பவரிடம் கொடுத்து விட்டார். சிறிது நேரத்தில் அங்கே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரமோத் விட்டல் போஸ்லே (21) என்பவர் வந்தார். இவர் மோகன் குமாரிடம் 5 ஆண்டிற்கு மேலாக தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் சில நாட்கள் இரவு நேரத்தில் தங்க பட்டறையில் வேலை செய்வது வழக்கம். தங்க கட்டிகளை நகையாக மாற்ற வேண்டும் எனக்கூறி இவர் நோவாவிடம் சாவி வாங்கினார். தங்க பட்டறையை திறந்து வைத்து சிறிது நேரம் வேலை செய்தார். பின்னர் அவரை காணவில்லை. பட்டறை திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த நோவா அங்கே சென்று பார்த்தார். அப்போது பட்டறையில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தது. பிரமோத் விட்டல் போஸ்லேவை காணவில்லை. இது தொடர்பாக வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் 1067 கிராம் எடையிலான தங்க கட்டிகளை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் 50.50 லட்ச ரூபாய். இந்த தங்க கட்டிகளுடன் பிரமோத் விட்டல் போஸ்லே சொந்த ஊருக்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் கோவை ரயில் நிலையம் மற்றும் சென்னை ரயில் நிலையத்தில் இவரின் போட்டோ வைத்து விசாரித்து வருகின்றனர். இவர் போலீசார் தேடுவதை அறிந்து செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டதாக தெரிகிறது. இவரை பிடிக்க போலீசார் மகாராஷ்டிரா சென்றுள்ளனர். பிரமோத் விட்டல் போஸ்லே, இந்த பட்டறையில் நேர்மையாக பணியாற்றி வந்துள்ளார். எந்த நகையும் இவர் எடுக்க மாட்டார். நகைகளை பாதுகாக்க ஆர்வம் காட்டி வந்தார். இவரின் செயல்பாட்டை அறிந்த மோகன்குமார், இவரை நம்பி தங்க கட்டிகளை அதிகளவு கொடுத்து வைத்திருந்தார். ஆனால் தீபாவளி நேரத்தில் அதிக நகை செய்ய வேண்டும் எனக்கூறி பிரமோத் விட்டல் போஸ்லே நாடகமாடி சாவி வாங்கி தங்க கட்டி திருடி தப்பியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

யூடியூப்பில் அவதூறு கருத்து கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்

ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது

2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்