கோவை செம்மொழி பூங்கா பணிமுதல்வர் விரைவில் துவக்கிவைப்பார்

 

கோவை, செப். 20: கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சி காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா ரூ.172 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முதல்வரால் இப்பணிகள் துவக்கி வைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் 18 மாதத்திற்குள் நிறைவுபெறும். பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தில் இயல்பு நீர் சோதனை ஓட்டம் வருகிற 25ம் தேதி நெல்லித்துறை முருகையன் பரிசல்துறை தலைமை நீரேற்றும் நிலையத்தில் நடைபெறும். இன்னும் 800 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதர பணிகள் முடிந்துவிட்டன. வரும் அக்டோபர் 20ம்தேதிக்குள் முழுமையான சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் வகையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மத்திய மண்டலம் 48-வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுரம், சத்தி சாலை பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது. இதில் டென்சில் ரூப் அமைத்தல், பேவர் பிளாக், மழைநீர் வடிகால், சாலை அமைத்தல், வணிக வளாகம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வடக்கு மண்டலம் 10-வது வார்டுக்கு உட்பட்ட பூந்தோட்டம் நகர் பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மத்திய மண்டலம் வ.உ.சி பூங்காவில் தென்கிழக்கு பகுதியில் கணித பூங்கா ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், நடைபாதை, சுற்றுச்சுவர், குடிநீர், மின்சாரம், கழிவறை வசதிகள், மாணவ-மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் கணித மாதிரிகள் அமைக்கப்பட உள்ளன. ஒண்டிப்புதூர் பகுதியில் விடுபட்ட இடங்களில் ரூ.210 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி ஆகிய இடங்களில் ரூ.600 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இவ்வாறு கமிஷனர் மு.பிரதாப் கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை