கோவில்பட்டியில் கலைநயத்துடன் வடிவமைக்கப்படும் சுவாமி சிலைகள்: பக்தர்கள் இடையே வரவேற்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் கலைநயத்துடன் வடிவமைக்கப்படும் சுவாமி கற்சிலைகள் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் தற்போது வந்தாலும், காலத்தால் அழியாத வரலாற்று பொக்கிஷங்களாக கோயில்களில் கற்களால் வடிவமைக்கப்பட்ட சுவாமிகள் சிலைகளுக்கு ஈடெதும் இல்லை. பழங்காலந்தொட்டு தொடங்கிய கற்சிலைகளை வடிவமைக்கும் தொழில்நுட்பமானது இன்றைய வரை அதன் வடிவமைப்பு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தற்போது வளர்ந்து வரும் நாகரீக, விஞ்ஞான உலகில் எத்தனை வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த விஞ்ஞான வளர்ச்சியையும் தாண்டி உலகில் மனிதன் தோன்றிய நாள் தொடங்கி இன்று வரை மக்கள் தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் பண்டைய காலம் முதல் ஏதாவது ஒரு பெயரில் தெய்வங்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த வகையில் தான் தாங்கள் விரும்பும் தெய்வங்களை கற்சிலைகளாக வடித்து அதனை வணங்கி வருகின்றனர். சுவாமிகளின் கற்சிலைகளை வணங்கும் பழக்கம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. இந்த சுவாமிகளின் கற்சிலைகள் கோயில்கள் மட்டுமின்றி பெரும்பாலான வீடுகள், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. இந்த சுவாமி சிலைகளுக்கு விசேஷ நாட்களில் பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகளை நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தமிழகத்தில் விநாயகர், முருகன், அய்யனார், கிருஷ்ணன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் கற்சிலைகள் கோயில்களில் கலை நயத்துடன், தெய்வீக தன்மையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தகைய சுவாமிகளின் கற்சிலைகள் கோவில்பட்டியிலும் கலைநயத்துடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோவில்பட்டியில் செதுக்கப்படும் சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் வளைவு ரோட்டில் பிரகாஷ் எனும் சிற்பி, சுவாமிகளின் உருவங்களை கற்களில் சிலைகளாக செதுக்கி விற்பனை செய்து வருகிறார். இவர் நந்தி, விநாயகர், சிவலிங்கம், முருகன், சரஸ்வதி, லட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் உருவம் கொண்ட கற்சிலைகளை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இவர் செதுக்கும் சிலைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது சிலைகளுக்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வருகின்றன. இதுகுறித்து சிற்பி பிரகாஷ் கூறுகையில், ‘ஒரு அடி முதல் 6 அடி உயரம் வரை கொண்ட சிலைகள் செய்யப்படுகிறது. இந்த சிலைகள் ரூ.ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த சிலைகளை வடிவமைப்பதற்கான கருங்கற்களை அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து விலைக்கு வாங்கி வருகிறோம். கோவில்பட்டியில் செதுக்கப்படும் சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பக்தர்களின் எண்ணத்திற்கேற்ப சுவாமி சிலைகளை கலைநயத்துடன் வடிவமைத்து கொடுத்து வருகிறோம்’ என்றார்….

Related posts

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு