கொரோனா பரவல் எச்சரிக்கையால் தர்ப்பணம் கொடுக்க கடற்கரை வந்தோர் ஏமாற்றம்-கடற்கரைகள் வெறிச்சோடியது

நாகை : கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக நாகை புதிய கடற்கரைக்கு அமாவாசை தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர்.அமாவாசை தினத்தன்று நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு வழிபாடு நடத்தி தர்ப்பணம் மற்றும் அன்னதானம் செய்வது வழக்கம். இதன்படி நாகை மாவட்டத்தில் கோடியக்கரை, நாகை புதிய கடற்கரை, காமேஸ்வரம் ஆகிய கடற்கரைகளில் அமாவாசை தினத்தன்று மூதாதையர்களுக்கு படையலிட்டு பொதுமக்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம்.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் 31ம் தேதி வரை கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.எனவே கோடியக்கரை, நாகை புதிய கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் குளிக்கவோ, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவோ கடற்கரைக்கு வரகூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடற்கரைகள் நுழைவு வாயில் பகுதியில் இரும்பிலான தடுப்பு கட்டைகளை போலீசார் வைத்து பொதுமக்கள் வர தடை விதித்துள்ளனர். இருப்பினும் நேற்று பூ மாலை, எள், வாழைப்பழம், வாழை இலை, ஊதுபத்தி, சூடம், அரிசி மற்றும் காய்கறிகளுடன் ஒரு சில பொதுமக்கள் நாகை புதிய கடற்கரைக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரை நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர்.இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் ஆடி அமாவாசை என்பதால் மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதற்கு பதிலாக காய்கறி கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது.வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கொரொனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மாவட்ட நிர்வாகம் நேற்று ஆடி அமாவாசைக்கு கடலில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனால் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா தலைமையில் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ஆடி அமாவாசை என்பதால் கடலில் புனிதநீராஏராளமானோர் வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி திரும்பி அனுப்பினர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயமும் மூடப்பட்டிருந்ததால், பக்தர்கள் கோபுர தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.பொதுமக்கள் கடும் அவதிஆடி அம்மாவாசையன்று பித்ருலோகத்திலிருந்து பூமியை நோக்கி மூதாதையர்கள் வரும் நாள் என்று கருதப்படுவதால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தர்ப்பணம் கொடுப்பது வாடிக்கை. கொரோனா எச்சரிக்கையால் நீர் நிலைகளில் கூட தடை உள்ளதால் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றின் கரையில் தர்ப்பணம் அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் தர்ப்பணம் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் இதனால் காவிரிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது. பலர் சின்னமாரியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள காவிரி திம்மநாயக்கன் படித்துரைக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்