கொரோனா தடுப்பு பணி: 5 மாவட்டங்களில் நேரில் ஆய்வு; முதற்கட்டமாக சேலத்தில் ஆய்வு செய்ய விமான நிலையம் புறப்பட்டார் முதல்வர்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை 5 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். முதல்கட்டமாக சேலத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். முதற்கட்டமாக அவர் இன்று காலை சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு சேலம் விமான நிலையத்தை சென்றடைகிறார். 9.15 மணிக்கு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, 9.45 மணிவரை அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் இரும்பு ஆலை வளாகத்திற்குச் செல்கிறார்.
அங்கு உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை பார்வையிட்டுவிட்டு, காலை 10.45 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். பின்னர் பிற்பகல் 12.15 மணிக்கு திருப்பூர் மாவட்டம் நேதாஜி அப்பேரல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அங்கு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்துவிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கு கோவை விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொடிசியா மைதானத்திற்கு 5.15 மணிக்கு செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வசதிகளை பார்வையிட்டுவிட்டு, மருத்துவ அதிகாரிகள், டாக்டர்களுடன் கலந்தாலோசனை செய்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து 5.45 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்கு குமரகுரு கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ அதிகாரிகள், டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து 6.30 மணிக்கு புறப்பட்டு கோவை விமான நிலையத்தை மாலை 6.45 மணிக்கு சென்றடைகிறார். இரவு 7.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மதுரைக்கு இரவு 8 மணிக்கு செல்கிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை விருந்தினர் மாளிகையை 8.30 சென்றடைகிறார்.

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை