கொரோனாவின் கோரப்பிடியில் மனித உயிர்கள்!: கடந்த 27 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் பலி..அதிச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியீடு..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், கடந்த 27 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. கொரோனா 2ம்  தாக்கத்தால் தின்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பதும் இயல்பாகி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் செய்வதறியாது திகைத்து வருகிறது. பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க அவர்களது உறவினர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மயானங்கள் திகில் பட காட்சி போல இடைவெளியின்றி எரிந்துகொண்டே இருக்கின்றன. 
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது நாடாக இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சுமார் 450 நாட்களாகியுள்ள நிலையில், கடந்த 27 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டனர். அதேகாலகட்டத்தில் சுமார் 85.4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் முதல் 206 நாட்களில் 1 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து 1 லட்சம் பேர் உயிரிழப்பை எட்ட சரியாக 208 நாட்கள் எடுத்தது. 
கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று 2 லட்சத்தை தொட்ட  உயிரிழப்பு, தற்போது வெறும் 27 நாட்களில் 3 லட்சத்தை கடந்துள்ளது. மே மாதத்தின் முதல் 23 நாட்களில் மட்டும் 87 ஆயிரத்து 413 பேர்  உயிரிழந்துவிட்டனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 36 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரத்திற்கு உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 45 சதவீத மரணங்கள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு