கொரோனாவால் இப்படியும் ஒரு சிக்கல் அய்யா… எங்களை வெளிய விட்றாதீங்க வேலை கிடைக்காது; வயிறுதான் காயும்: பரோலில் செல்ல மறுத்து கைதிகள் அடம்

மும்பை: மகாராஷ்டிரா சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கொரோனா காலத்தில் இந்த நெரிசலை குறைக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கொரோனாவை காரணம் காட்டி பல கைதிகளை அவசர பரோலில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவசர பரோலில் விடுதலை செய்யப்படுவதை பல கைதிகள் விரும்பவில்லை. தண்டனை காலம் முடியும் வரை சிறையிலேயே இருக்க விரும்புவதாக தெரிவித்து விட்டனர். ஒடிசாவை சேர்ந்த ஒரு கைதி, மோசடி வழக்கில் தண்டனை பெற்றவர். இவர் நவிமும்பை, தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அவசர பரோலில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பரோலில் வெளியே செல்ல அவர் மறுத்து விட்டார். வெளியே சென்றால் தான் குடும்பத்திற்கு சுமையாக இருக்க வேண்டியிருக்கும் என்றும், அதை தான் விரும்பவில்லை என்றும் கூறி அந்த கைதி பரோலில் விடுதலை செய்யப்படுவதை வி்ரும்பவில்லை என்று சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.  இன்னொரு கைதி, தான் சிறையில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை சேமிக்க விரும்புவதாகவும், விடுதலை ஆனதும் அந்த பணத்தை கொண்டு தன் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதாகவும் தெரிவித்துவிட்டு பரோலில் வௌியே செல்ல மறுத்துவிட்டார். மேலும் வெளியே சென்றால் கொரோனா காலத்தில் வேலை கிடைக்காது என்றும் அதை விட தண்டனை காலம் முடியும் வரை சிறையிலேயே இருப்பதே மேல் என்றும் பல கைதிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிரா சிறைகளில் கைதிகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து ஒரு விசாரணையை நடத்தியது. அப்போதுதான், பரோலில் வெளியே செல்வதை கைதிகள் விரும்பவில்லை என்று நீதிபதிகளிடம் மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் அசுதோஷ் கும்பகோணி தெரிவித்தார். சிறையில் இருந்து எப்போதுதான் விடுதலை கிடைக்கும் என்று கைதிகள் ஏங்கிய காலம் போய், வெளியில் போனால் வேலை கிடைக்காது, குடும்பத்துக்கு சுமையாக இருக்க முடியாது என்று கைதிகள் முடிவு எடுக்கும் அளவுக்கு, சிறைக் கைதிகள் மனதிலும் கொரோனா பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது. * மகாராஷ்டிரா சிறைகளில் அதிகபட்சமாக 23,260 கைதிகளை அடைக்க முடியும்.* கடந்த மார்ச்சில் முதல் அலையின்போது 36,060 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர்.* சிறைகளில் தற்போது உள்ள கைதிகளின் எண்ணிக்கை 33,953.* பிரதான சிறைகளில் இருப்பவர்கள் 32,616 பேர்.* கொரோனா மையங்களில் இருப்பவர்கள் எண்ணிக்கை 32.* சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 1,102. …

Related posts

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு