கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம் முக்கிய குற்றவாளி சயானிடம் போலீசார் இன்று விசாரணை: பரபரப்பு வாக்குமூலம் அளிக்கிறார்

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளி சயானிடம் இன்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளிக்க உள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவிற்குள் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவிற்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில் , கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்தார். சயானும் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆனால், அந்த விபத்தில் அவருடைய மகளும் மனைவியும் உயிரிழந்தனர். கொடநாடு எஸ்டேட் வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தற்போது ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அதிமுகவின் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது,  அரசு வக்கீல்கள் கொடநாடு கொலை வழக்கை மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும். குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் மனு அளித்தனர். இந்நிலையில், மீண்டும் சயானிடம் கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவருக்கு தெரிந்த ரகசிய தகவல்கள் அனைத்தையும் கூறும்படி அதில் கூறப்பட்டுள்ளது.  இதைதொடர்ந்து கோத்தகிரி போலீசில் சயான் இன்று நேரில் ஆஜராகிறார். அவரிடம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது, அவர்  கொலையின் பின்னணியில் இயங்கிய முக்கிய புள்ளிகள் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தெரிகிறது. மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவ்வழக்கு விசாரணையை முதலில் இருந்து துவங்கப்படுவதால், பல திருப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …

Related posts

விக்கிரவாண்டியில் 82.48 சதவீத வாக்குப்பதிவு; நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை; வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டம்

சென்னை மாநகராட்சி பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்