கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் 2 நாள் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில்  தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் பெய்யத் தொடங்கியது. அதில் இருந்தே கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கேரளா முதல் குஜராத் வரையிலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள தீவிர வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அத்துடன் கர்நாடகாவிலும் தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் 7, 8ம் தேதிகளில் மிக கன மழை முதல், மிக மிக கனமழை பெய்யும், இந்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெலங்கானாவில் 9ம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அங்கும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கேரளாவில் ஓரிரு இடங்களில் 12ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் மேற்கண்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டம், கோவை  மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன  முதல் மிக கனமழை  பெய்தது. குறிப்பாக திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. மேல்பாவானி, வால்பாறை 70மிமீ, நடுவட்டம் 60மிமீ, பந்தலூர், சென்னை தண்டையார் பேட்டை, துறைமுகம் 50மிமீ, கூடலூர் 40மிமீ, பெரம்பூர், வில்லிவாக்கம் 30மிமீ மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்துள்ளது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும். சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், குமுரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதைஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் 9ம் தேதி வரை வீசும். ஆந்திர கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  50கிமீ வேகத்தில் இன்று வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்