கேட்பாரற்று சாலையில் கிடந்த ₹98 ஆயிரம் போலீசிடம் ஒப்படைப்பு

தாம்பரம், ஜூலை 7: தாம்பரம் அருகே கேட்பாரற்று சாலையில் கிடந்த ₹98 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடு, புதூர் நகரைச் சேர்ந்தவர் டேனியல் (34). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று வேலைக்குச் செல்வதற்காக வெங்கம்பாக்கம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த சிறிய அட்டைப் பெட்டியை எடுத்து பார்த்தார். அதில் ₹98 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. கேட்பாரற்று கிடந்த அந்த பணத்தை உரியவர்களிடம் எப்படி ஒப்படைப்பது என்று தெரியாததாலும், வேலைக்கு நேரம் ஆனதாலும் டேனியல் தனது சகோதரர் சாமுவேலிடம் பணத்தை ஒப்படைத்து, சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடும்படி கூறியுள்ளார். தொடர்ந்து சாமுவேல், சேலையூர் காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கலைமகளிடம் ₹98 ஆயிரத்தை ஒப்படைத்தார். அப்போது போலீசார் அவரை பாராட்டினர். இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பணத்தை தவறவிட்டவர்கள் உரிய ஆதாரத்துடன் காவல் நிலையம் வந்து தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை