கெட்டுப்போன 60 கிலோ சிக்கன், இனிப்பு வகைகள் அழிப்பு

ஓசூர், ஜன.10: ஓசூர் அருகே பேக்கரி மற்றும் ஓட்டல்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் மற்றும் இனிப்பு- கார வகைகளை உணவு பாதுகாப்புத்துறையினர் கைப்பற்றி அழித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின்பேரில், நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுரையின்படி, ஓசூர் டவுன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையிலான குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பாகலூரில் உள்ள உணவகங்களில் நேற்று ஆய்வு நடத்தியபோது கெட்டுப்போன சுமார் 60 கிலோ சிக்கன், மட்டன், மீன் உணவு வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை இருப்பு வைத்து உணவு தயாரிக்க பயன்படுத்தி வருவது தெரிந்தது. இதேபோல், அங்குள்ள பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடைகளில் ஆய்வு செய்ததில் காலாவதியான 9 கிலோ இனிப்பு-கார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர். தொடர்ந்து உணவகம், பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் இன்றி நடத்தி வரும் ஓட்டல், பேக்கரி, ரிசார்ட்ஸ், சொகுசு விடுதிகளின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் கீழ், நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை