கூலி உயர்வு வழங்கக்கோரி தச்சு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

 

ராஜபாளையம், ஜூலை 4: ராஜபாளையத்தில் தச்சு தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்க கோரி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் தச்சு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு தினக் கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.770 நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே, அன்றாடம் வேலைக்கு பயன்படுத்தி வரும் பொருட்களின் வாடகை, கூலியாட்களின் அன்றாட செலவு, உபகரணங்கள் தேய்மானம் மற்றும் பிளேடு உள்ளிட்டவை உடைந்து சேதமாகுதல் போன்ற காரணங்களாலும், தங்களுக்கு வழங்கப்படும் கூலி கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

செலவு போக நாள் ஒன்றுக்கு ரூ. 500 மட்டுமே கிடைப்பதால் தங்களின் குடும்ப செலவு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாக தச்சு தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.130 உயர்த்தி தினக் கூலியாக ரூ.900 வழங்க கோரி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, கூலியை உயர்த்தி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தச்சு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை