கூட்டுக்குடிநீர் குழாய் திருடிய 2 ேபர் கைது

மல்லசமுத்திரம், ஜன.8: மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திப்பள்ளி கிராமம், வேலணம்பாளையம் பகுதியில் பூலாம்பட்டி காவிரி குடிநீர் இணைப்பு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளுக்காக, ஆங்காங்கே பிளாஸ்டிக் குழாய்கள் பதிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, இத்திட்டத்தின் சப் கான்ட்ராக்டர் கோவிந்தராஜன் வேலணம்பாளையம் வழியாக சென்ற போது, கோழிப்பண்ணை உரிமையாளர் சுந்தரராஜன்(36), வண்டிநத்தம் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் நந்தகுமார்(27) ஆகியோர் குடிநீர் குழாய்களை டெம்போவில் ஏற்றியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜன், எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்ததில், கோழிப்பண்ணை உரிமையாளர் சுந்தரராஜன் வீட்டில் ஏற்கனவே 3 குடிநீர் குழாய்கள் திருடி சென்று வைத்துள்ளதும், நான்காவதாக ஒரு குழாய் திருடும்போது கையும், களவுமாக மாட்டிக் கொண்டதும் தெரிய வந்தது. திருடிய குடிநீர் குழாய்களின் மதிப்பு ₹1 லட்சம் ஆகும். இதையடுத்து, எலச்சிபாளையம் எஸ்.ஐ பொன்குமார் தலைமையிலான போலீசார், அவர்களை கைது செய்து, திருட்டுக்கு பயன்படுத்திய டெம்போவையும், குடிநீர் குழாய்களையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். கைதான சுந்தர்ராஜன் பருத்திபள்ளி ஊராட்சி மன்ற துணை தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை