கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட பாஜகவின் கொபிசெவாக எடப்பாடி செயல்படுகிறார்: ஈரோட்டில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி

ஈரோடு: கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட பாஜகவின் கொள்கை பிரசார செயலாளராகவே செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி என ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில்  மனித நேய மக்கள் கட்சி மாநிலத்தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட பாஜவின் கொள்கை பிரசார செயலாளராகவே (கொபிசெவாக) அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். ஒரே நாடு. ஒரே மொழி எனக் கூறி தமிழ் மொழியின் உரிமையை பறிக்க பாஜ முயற்சித்து வருகிறது. இந்தியாவில் ஒரே அரசு தான் இருக்க வேண்டும். மாநில அரசுகளை ஒழித்துவிட்டு, முனிசிபாலிட்டிகளை போல மட்டுமே அவை செயல்பட வேண்டும் என திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது ஒன்றிய பாஜ அரசு. அதையே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலும் வரும் என எல்லா இடங்களிலும் கூறி வருகிறார். இதன் மூலம், பாஜவின் கிளைக் கழகமாக அதிமுக மாறிவிட்ட அவல நிலையை நாம் உணர முடியும்.  மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. எனவே, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு