குளிர்பானம் குடித்த சிறுமி ரத்த வாந்தி எடுத்து சாவு: உடலும் நீல நிறத்தில் மாறியது

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகள் தாரணி(13). இவள் நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று, குளிர்பானம் வாங்கி குடித்தாள். அதோடு, ரஸ்னா பாக்கெட்டையும் வாங்கி குடித்தாள். இரண்டையும் குடித்த சில நிமிடங்களிலேயே தாரணி வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மூக்கில் இருந்தும் ரத்தம் வந்துள்ளது. இதனால் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தாள். மேலும், அவளது உடல் நீல நிறத்தில் மாறியது. இதை பார்த்து பயந்துபோன குடும்பத்தினர், தாரணியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தகவலறிந்த சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து வந்து, தாரணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவள் குடித்த குளிர்பானத்தில் இருந்து கொஞ்சமாக எடுத்து, அதை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மளிகை கடையில் காலாவதியான பொருட்களையும், தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையிலுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமி குடித்த குளிர்பானம் போன்ற 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் விற்காமல் மீதம் உள்ள பாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே சிறுமியின் பிரதே பரிசோதனையில் மூச்சுக்குழலில் உணவுத்துகள்கள் இருந்ததாகவும், அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் டாக்டர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிறுமியின் உடலில் குளிர்பானத்தின் விஷம் ஏறி இருக்கிறதா, என்பதை கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு