குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு வீடு இடிந்து வெளியேற முடியாமல் விடிய, விடிய மூதாட்டி தவிப்பு தீயணைப்பு துறையினர் மீட்டனர்

நாகர்கோவில், ஜூன் 22: குமரி மாவட்டத்தில் மழையால் வீடு இடிந்து வெளியேற முடியாமல் தவித்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, குமரி மாவட்டத்திலும் தற்போது மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் மழை இருந்தது. குலசேகரம், திருவட்டார், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாளாக பெய்த தொடர் மழையால், மாவட்டத்தில் 3 இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. இதில் நாகர்கோவில் அருகே உள்ள புல்லுவிளையில் பொன்னுசாமி என்பவரின் வீடு நள்ளிரவில் இடிந்து விழுந்தது. மேற்கூரையும், ஒரு பக்க சுவரும் இடிந்தது. இந்த வீட்டில் பொன்னுசாமியின் மனைவி பாக்கியவதி (72) என்பவர் மட்டும் உள்ளார். அவரும் எழுந்து நடந்திருக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். வீடு இடிந்து விழுந்த பகுதியில் இல்லாமல், மற்றொரு பகுதியில் கட்டிலில் படுத்திருந்ததால், அவர் உயிர் தப்பினார். இருப்பினும் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் இடிபாடுகளுக்குள் கட்டிலில் கிடந்தார். இது குறித்து நேற்று காலை தீயணைப்பு துறைக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில், உதவி கோட்ட அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று அந்த மூதாட்டியை மீட்டனர். அவருக்கு ஒரே ஒரு மகள் உண்டு. அவர் வேறொரு வீட்டில் வாடகைக்கு உள்ளார். அவருக்கு தகவல் தெரிவித்து, தற்போது மாற்று இடத்தில் பாக்கியவதியை தங்க வைத்துள்ளனர். பாக்கியவதி உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தான், உணவு கொடுத்து உதவி உள்ளனர். இரவில் வீடு இடிந்த சத்தம் கேட்க வில்லை. காலையில் வீடு இடிந்தததை பார்த்ததும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தோம் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறினர். இந்த மூதாட்டிக்கு அரசு உதவ வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.44 அடியாக இருந்தது. அணைக்கு 703 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 637 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.95 அடியாக உயர்ந்தது. அணைக்கு 252 கன அடி தண்ணீர் வந்து ெகாண்டு இருந்தது. சிற்றார்-1ல் 16.07 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 162 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிற்றார்-2ல் 16.17 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கை 15.9 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 41.42 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 18.4 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டி வருகிறது. அணை நீர்மட்டம் 72 அடியாக உயரும் தருவாயில் பெருஞ்சாணி அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் செய்து வருகிறார்கள்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை