குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடக்கம்: குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குளத்து பாசன பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் சுருங்கி போனதன் விளைவாக தற்போது சுமார் 7000 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி பணிகள் நடக்கின்றன. கன்னிப்பூ மற்றும் கும்பபூ ஆகிய இருபோக சாகுபடிகள் நடக்கின்றன. இதில் கன்னிப்பூ  சாகுபடி பணிகள் ஜூன் மாதம் முழு அளவில் தொடங்கும். இதற்காக பேச்சிப்பாறை அணை ஜூன் மாதம் திறக்கப்படும்.கால்வாய் பாசனம் தவிர, குளத்து பாசன பகுதிகளில் சித்திரை 10ல் விதைப்பு பணிகள் தொடங்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்த மழையால் தற்போது குளங்களில் தண்ணீர் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்தும் வருகிறது. அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த முறை கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜூன் மாத 2 வது வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை இருக்கும். எனவே அணைகளுக்கும் தண்ணீர் வரத்து வந்து விடும். இதை கருத்தில் கொண்டு தற்போது குளத்து பாசன பகுதிகளில்  சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. சுசீந்திரம், தெங்கம்புதூர், காக்கமூர், பறக்கை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. கடந்த வருடம் வடக்கிழக்கு பருவமழை பெய்து பலத்த சேதம் அடைந்ததால், கும்பபூ சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கியது. வருடம் தோறும் கும்பபூ அறுவடை பணிகள் மார்ச் மாதம் முடிந்துவிடும். ஆனால் கடந்த வருடம் கும்பபூ சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கியதால், பல பகுதிகளில் அறுவடை தாமதமாக தான் நடந்தது. கோடை காலத்தில் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படும். தற்போது பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன. அக்னி நட்சத்திரம் 4ம் தேதி தொடங்குகிறது. கோடையில் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு மழையால் சேதம் அடைந்த கால்வாய் பகுதிகளையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு