குமரி மாவட்டத்தில் இயந்திரங்கள் உதவியுடன் கும்பப்பூ சாகுபடி

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கூலி அதிகரிப்பால், நடவு இயந்திரம் மூலம் விவசாயிகள்  கும்பப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ அறுவடை முடிந்து கும்பப்பூ சாகுபடி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம், தேரூர் உள்பட பல்வேறு இடங்களில் ஒரு மாதத்திற்கு முன்பே நடவு பணி முடிந்துவிட்டது. தற்போது தோவாளை சானல், அனந்தனார் சானல் உள்ளிட்ட கடைவரம்பு பகுதிகளில் சாகுபடி நடந்து வருகிறது. நெல் சாகுபடி செய்யும்போது பெண் தொழிலாளர்களை கொண்டு நாற்று நடப்படும். தற்போது வேலை ஆட்கள் குறைவு மற்றும் கூலி அதிகரிப்பால் விவசாயிகள் மாற்று முறையை கையாள தொடங்கியுள்ளனர் . தற்போது தொழிவிதைப்பு, பொடிவிதைப்பு, இயந்திரம் கொண்டு நடவு செய்யும் முறை பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது.  இதனால் வேலை ஆட்கள் தேவையில்லை. மேலும் கூலியும் அதிகம் ஆகாது என விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்து வருகிறது. கும்பப்பூ சாகுபடி தற்போது நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி இந்த சாகுபடி நடக்கும். தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் போதிய அளவு உள்ளது. கடந்த காலங்களில் நடவு செய்வதற்கு வேலை ஆட்கள் அதிகமாக கிடைத்தனர். அவர்களுக்கு கூலியும் குறைவாக இருந்தது. தற்போது வேலை ஆட்கள் பற்றாக்குறையுடன், கூலியும் அதிகமாக உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள வயல்களில் நடவு செய்வதற்கு ரூ.5 ஆயிரம் கூலியாக செலவு செய்யவேண்டியுள்ளது.  அதனுடன் நடவு செய்யும்போது அடிஉரமும் போடவேண்டும். ஆனால் தொழிவிதைப்பு, பொடிவிதைப்புக்கு இந்த உரம் தேவையில்லை. மேலும் தொழிவிதைப்பு, பொடிவிதைப்பின்போது வயலில் உரிமையாளரே நெல்களை வயல்களில் தூவியும், நெல் விதைக்கும் இயந்திரம் கொண்டும் சாகுபடி பணியை முடித்துவிடலாம். இதனால் கூலி மிச்சமாகும். பல விவசாயிகள் இயந்திரம் கொண்டும் நாற்று நடவு செய்து வருகின்றனர். இதற்காக நாற்றங்கால் அமைத்து, நாற்று ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்தவுடன், வயல்களில் இயந்திரம் கொண்டு நடவு செய்கின்றனர். இதனால் கூலிமிச்சம் ஆவதுடன், நடவு செய்யப்பட்ட நாற்றும் நேர்கோட்டில் இருக்கும்.  ஒரு ஏக்கரில் 60 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்படும். ஆனால் ஆட்களை கொண்டு நடவு செய்யும்போது 35 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே நடப்படுகிறது. இதனால் மகசூல் குறைவாக கிடைக்கும். இயந்திரம் கொண்டு சாகுபடி செய்யும்போது மகசூலும் அதிகமாக கிடைக்கும் என்றார்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி