குன்றத்தூர் அருகே சாலையின் நடுவில் மின்கம்பங்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, இதனை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.குன்றத்தூரில் இருந்து போரூர் செல்வதற்கு கோவூர் வழியாக செல்லும் சாலையே பிரதான சாலையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. பெருகி வரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு இந்த குன்றத்தூர் போரூர் பிரதான சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பலனாக தற்போது இந்த சாலை அகலப்படுத்தப் பட்டுள்ளன. இருந்த போதிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு குன்றத்தூர் – போரூர் பிரதான சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. இந்த நிலையில், கோவூர் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகம் முன்புறம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் பெரும்பான்மையான பகுதியை ஆக்கிரமித்து உயரழுத்த மின்கம்பங்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனை கவனிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி அந்த மின்கம்பத்தில் மோதி சிறு, சிறு விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாகல இரவு நேரத்தில் இந்த மின்கம்பங்கள் வாகன ஓட்டிகளுக்கு சுத்தமாக தெரிவதே இல்லை. இதனால், இந்த பகுதியில் விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. மேலும், பிரதான சாலை ஆக்கிரமிப்பால் இந்த சாலையில் பயணிக்கும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் தங்கு தடையின்றி செல்வதற்கு பெரிதும் இடையூறாக உள்ளது.  இது குறித்து சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் சார்பில் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்த மின்கம்பத்தின் அருகிலேயே மின்வாரிய அலுவலகம், கோவூர் ஊராட்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு பேருந்து நிலையம், பள்ளிகள், தொழிற்சாலைகள் என ஏராளமாக உள்ளன. அவற்றிற்கெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தை இடமாற்றம் செய்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை

யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு