குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் வேலிவியூ சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி : ஊட்டி வேலிவியூ பகுதியில் உள்ள நகராட்சி சாலை குண்டும் குழியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதனை விரைந்து சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி வேலிவியூ பகுதியில் இருந்து கேத்தி செல்ல சாலை உள்ளது. இச்சாலையில் குமரன் நகர் வரை ஊட்டி நகராட்சி கட்டுபாட்டிலும், அதன் பிறகு உள்ள சாலை கேத்தி பேரூராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளது. எல்லநள்ளி சென்று கேத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை காட்டிலும் இச்சாலை வழியாக பயணித்தால் தூரம் குறைவு என்பதால் சிறிய ரக கார்கள், இருசக்கர வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், வேலிவியூ சந்திப்பு முதல் இச்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறி கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இதனால், இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமடைந்து வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க கூடிய அபாயமும் நீடிக்கிறது. இதனால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ஊட்டி நகராட்சி நிர்வாகத்திற்கும், கேத்தி பேரூராட்சிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி கட்டுப்பாட்டில் வரும் பகுதி வரை குமரன் நகர், வேலிவியூ சாலை சீரமைக்க நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பணிகள் துவங்காமல் உள்ளது. எனவே, விரைந்து பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கேத்தி பேரூராட்சி நிர்வாகமும் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது