குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு ஒன்றிய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்:  டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்ற தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டினுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை ஒன்றிய அரசிடம் விளக்கி அனுமதியை பெற்றே ஆக வேண்டும்.ஒருவேளை அதில் ஏதாவது சிரமம் இருந்தால், பிரதமரின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும். தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்கு நேற்று விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கைக்கு அதிமுக தனது முழு ஆதரவினை நல்கும்.விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): வேலுநாச்சியாரின் பிறந்தநாளன்று அவரது பெருமையை பேசும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, குடியரசு தின விழா அணிவகுப்பில் வேலுநாச்சியார், வ.உ.சி போன்ற தலைவர்கள் இடம்பெற்றுள்ள தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்தது எந்த விதத்தில் நியாயம். மேலும், தமிழகத்தின் ஊர்திகளை நிராகரிப்பது ஒட்டுமொத்த தமிழகத்தை நிராகரிப்பதற்கு சமம். இது கண்டனத்துக்குரியது. வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசு, கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிகிறது என்றும் வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது எனவும் ஆணவத்துடன் பதிலளித்துள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழ்நாட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே, தமிழின விரோதப் போக்கை கைவிட்டு, குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தியை, இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.வி.கே.சசிகலா: நம் சுதந்திர போராட்ட  வீரர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்கள் உருவங்கள் அடங்கிய ஊர்திகள்  குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற எண்ணுவதை, ஒன்றிய அரசு அதிகாரிகள்  கனிவுடன் பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அனுமதி அளிக்க  மறுப்பது, மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ் மண்ணின்  வரலாற்றையும், அதன் பெருமைகளையும், விடுதலை போராட்ட வீரர்களின்  தியாகங்களையும் கருத்தில் கொண்டும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு  மதிப்பளிக்க ேவண்டும்.மக்கள் நீதி மய்யம்: குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் போன்ற விடுதலை வேள்விக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களை தாங்கிய ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): ஒன்றிய பாஜ அரசு ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு நிகழ்விலும் தமிழகம் மற்றும் தமிழ்மொழி புறக்கணிப்பு என்பது தொடர் கதையாகி வருகிறது.  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திருக்குறளையும்,  பாரதியின் கவிதைகளையும், தமிழகத்தை சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்களையும்  மேற்கோள்காட்டி பேசும் அதே நேரத்தில், மிக முக்கியமான குடியரசு தின  அணிவகுப்பில் அத்தகையவர்களை நினைவுகூர்வதை தடுப்பதன் மூலம் பாஜவின் இரட்டை  வேடம் மக்கள் முன் வெளிப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறுவதை  விரும்பாத பாஜவை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும்.எம்.முகம்மது சேக் அன்சாரி (பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர்): தேசம் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், ஆளும் மோடி அரசின் இந்த செயலானது சுதந்திரப் போராட்ட உண்மை தியாகிகளின் வரலாறுகளை மூடி மறைக்கும் நிகழ்வாகவே பார்க்கிறோம். மேலும், ஒவ்வொரு மாநிலங்களின் அடையாளங்களை, கலாச்சாரங்களை, மாநில தனித்துவங்களை பிரதிபலிக்கும் அவர்களின் உரிமைகளை அனுமதிக்காததின் மூலம், ஒன்றிய அரசு மாநில கலாச்சாரம் சார்ந்த உரிமைகளை பறிக்கிறது. எனவே, மாநில அரசுகள் ஓரணியில் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை