கிழக்கு கடற்கரை சாலையில் டாக்டர் வீட்டில் ரூ.40.5 லட்சம் மதிப்பு நகை, பணத்தை திருடிய 3 பேர் கைது: ரூ.36 லட்சம் நகை பறிமுதல்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் டாக்டர் வீட்டை உடைத்து ரூ.40.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை  சேர்ந்தவர் டாக்டர் அபர்ஜிந்தால் (39). இவர்  சென்னை கிழக்கு கடற்கரை சாலை,  அக்கரை, சி-கிளிப் 5வது நிழற்சாலை பகுதியில் கடற்கரை ஓரத்தில் ஒரு வாடகை  வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு  பிரபல மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த  செப்டம்பர் 25ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் தனது  சொந்த ஊரான நொய்டாவுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து, கடந்த 28ம் தேதி சென்னை  திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு  இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  வீட்டின் உள்ளே சென்று  பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் ரொக்கம், ரூ.36  லட்சம் மதிப்பிலான வைரம், தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது  தெரிய வந்தது.இதுகுறித்து, அவர் கானத்தூர் போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேளம்பாக்கம் உதவி கமிஷனர்  ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகுமாரன், தலைமை காவலர் விஜயகுமார்,  காவலர்கள் சதீஷ்குமார், கனகராஜ், இளங்கோ, லதா ஆகியோரை கொண்ட தனிப்படையினர்,  டாக்டர் வீட்டில்  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக  விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு  செய்தனர். அதில், சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு ஆட்டோ பதிவெண்ணை  அடிப்படையாக வைத்து விசாரித்தனர். அதில், 3 மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்றதும், அவர்கள்  திருச்சி, முசிறி மற்றும் உறையூரை சேர்ந்தவர்கள் எனத்  தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முட்டுக்காடு பகுதியில்  தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே  சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர். பின்னர்,  ஆட்டோவில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள்,   முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து, 3 பேரையும் காவல் நிலையம்  அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருச்சி மாவட்டம்  உறையூரை சேர்ந்த சங்கர் (32), முசிறியை சேர்ந்த மணிகண்டன் (26), வீரமுத்து  (41) என்பதும், இவர்கள் அக்கரை கடற்கரை பகுதியில் டாக்டர் அபர்ஜிந்தால்  வீட்டில் வைரம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.  இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார்,  அவர்களிடம் இருந்து ரூ.36  லட்சம் மதிப்பிலான வைரம், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், 3  பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்….

Related posts

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் சிறுமியை கடத்தி கொலை சடலம் கால்வாயில் வீச்சு: பெண்கள் உட்பட 3 பேர் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டி மிரட்டல்

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு