காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க ஆகஸ்ட் 10ம் வரை தடையை நீட்டித்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி :காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க ஆகஸ்ட்  10ம் வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் 16வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கும்படி கர்நாடகா அரசு விடுத்த கோரிக்கையை, ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் ஏற்றதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலும் புதிய வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், அபாய் மற்றும் பரிதிவாலா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து எந்த விவாதமும் நடத்தக் கூடாது. அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இந்த வழக்கில் காவிரி ஆணையத்தின் கருத்தை நீதிமன்றம் அறிந்து கொள்ள விரும்புகிறது. அதனால், ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டு, 26ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,’தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக பதில் அளிப்பதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். மேலும் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராக முடியாததால் இவ்வழக்கை வேறொரு நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும்,’என்று கோரிக்கை வைத்தார். கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘எங்களுக்கும் கால அவகாசம் வேண்டும். ஏனென்றால் இந்த வழக்கு தொடர்பாக ஒரு இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். எனவே வழக்கின் விசாரணையை வேறொரு நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும்,’என்று கோரிக்கை வைத்தார். தமிழக அரசு பொறுத்தவரை வழக்கு முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க ஆகஸ்ட்  10ம் வரை தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி