காவல்துறையினர் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் உள்நுழைவு அனுமதி சீட்டே நிரந்தர தீர்வு: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வட மாநிலத்தவர்களால் குற்றங்கள் அதிகரித்து வருவதை பலமுறை சுட்டிக்காட்டி வருகிறோம். பல குற்றங்கள் வடமாநிலத்தவர்களால் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்த குற்றங்களின் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால், காவல்துறையினர் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. தமிழக மக்களின் மீது தாக்குதல் நடத்தி வந்த வடமாநிலத்தவர்கள், தற்போது காவல்துறையினர் மீதே தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். பாஜவின் பின்புலத்துடன் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் மூலமாக, குஜராத், உத்தரபிரதேசத்தை போன்று மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன் வாயிலாக, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கலாம் என பாஜ திட்டமிட்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசு கொடுத்த தைரியத்தின் காரணமாக தான், கோவை, திருப்பூரில் இந்தியில் பிரசாரம், திருப்பூரில் கலவரம் ஆகிய குற்ற நிகழ்வுகள் அரங்கேறியது. அதன் மற்றொரு சிக்கல் தான், காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலும். எனவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்