காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரச பேச்சுவார்த்தை

சங்கராபுரம், ஆக. 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள மேட்டு தெரு பகுதியில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், தினந்தோறும் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள், தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மேலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் நேரடியாகவும், புகார் மூலமாகவும் தெரிவித்திருக்கின்றனர். நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்திலும் கூட பொதுமக்கள் இதுதொடர்பாக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இதுவரையில் ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சங்கராபுரம்-கல்வராயன்மலை செல்லும் சாலையில் திடீரென காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி