காலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு

சென்னை:  கொரோனா பரிசோதனை முடிவுகளை பொதுமக்கள் காலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக,  இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று தமிழக அரசு எடுத்த பல்வேறுகட்ட நடவடிக்கை காரணமாக, படிப்படியாக தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து நேற்று முன்தினம் 1,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்தாலும் ஆர்டிபிசிஆர் சோதனையை தொடர்ந்து நடத்த சென்னை மாநகராட்சி  முடிவு செய்துள்ளது. கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி இருப்பவர்களுக்கு ஆர்பிடிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்காக தமிழகம் முழுவதும்  69 அரசு பரிசோதனை மையங்கள், 202 தனியார் பரிசோதனை மையங்கள் என 271 பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,82,586க்கும் மேற்பட்டவர்களிடம் சளி மாதிரிகளை பெற்று அவற்றை சோதனை செய்து மறுநாள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடும் அறிக்கையின் மூலம் முடிவுகள் வெளியிடப்படுகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு  25 ஆயிரம் முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவுகள் மறுநாள் சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் மறுநாள் தான் தெரிய வருவதால், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மூலம்  மற்றவர்களுக்கு  பரவ அதிக வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் வகையில் இனி ஆர்டிபிசிஆர் சோதனையின் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  அதன்படி இன்று அல்லது நாளைக்குள் கொரோனா பரிசோதனை முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்