காதல் மனைவியை குத்திக் கொன்ற வழக்கு தொடர்பாக கொடூர கணவரிடம் தீவிர விசாரணை: தடயவியல் அறிக்கைக்கு காத்திருப்பு

சென்னை: ஆந்திர மாநிலம் கோனே அருவியில் காதல் மனைவியை குத்திக்கொன்ற கணவரிடம் பலகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், விசாரணையில்,  எவ்வித துப்பும் கிடைக்காததால் ஆந்திர போலீசார் திணறி வருகின்றனர். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் மதன் (19). ஆட்டோ டிரைவர். இவர், அதேபகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்பவரை காதலித்து வந்தார். இந்த விஷயம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்ததும் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில், தமிழ்ச்செல்வி காணவில்லை என்று செங்குன்றம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கும் தாக்கல் செய்தனர். இதுபற்றி, செங்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து மதனை பிடித்து விசாரித்தபோது பதற்றத்துடனும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதன்காரணமாக அவர் மீது சந்தேகம் வலுத்ததால் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், ‘‘ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு அழைத்துச்சென்று தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பி வந்துவிட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கோனே அருவியில் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் சிலர் கொடுத்த தகவல்படி, ஆந்திர மாநிலம் நாராயணவரம் போலீசார் சென்று விசாரித்தபோது, அங்குள்ள பாறையில் கிடந்த செருப்பு மற்றும் சுடிதாரை வைத்து தமிழ்ச்செல்வியின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்தது ஆந்திர எல்லை என்பதால் இவ்வழக்கு நாராயணவரம் போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு, மதனை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், ஆந்திர போலீசார் மதனை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் மதியம் பாடியநல்லூருக்கு வந்தனர். அங்கு மதன் மற்றும் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரணை நடத்தினர். இருப்பினும் எந்தவித ஆதாரங்களும் சாட்சியங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் மதனை செங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு ஆந்திர போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர். கைப்பற்றப்பட்ட சடலத்தின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் துறையின் ஆய்வு அறிக்கை வந்த பிறகே, இறந்தது தமிழ்ச்செல்வி என்று தெரியவரும், அதன்பிறகே மதனை கைது செய்வோம், என ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.செங்குன்றம் போலீசார் கூறுகையில், ‘‘தமிழ்ச்செல்வியை காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரை தேடியபோது ஆந்திர மாநிலம் நாராயணவனம் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிந்தது. ஆனால் கொலை நடந்த பகுதி ஆந்திர எல்லையில் உள்ளதால், அந்த மாநில போலீசார்தான் விசாரிக்க வேண்டும். இதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஆந்திர போலீசார் கேட்டுக்கொண்டால் ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்றனர்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு