காஞ்சிபுரத்தில் `உயர்வுக்கு படி’ சிறப்பு முகாம் உயர்வான எதிர்காலத்திற்கு உயர்கல்வி மிகவும் அவசியம்: மாணவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம், ஜூன் 27: காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் தனியார் மருத்துவ கல்லூரியில் நேற்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி” மாவட்ட அளவிலான சிறப்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர், மாணவர்களுக்கு கல்லூரி கனவு கையேட்டினை வழங்கினார். பின்னர், கலெக்டர் கலைச்செல்வி மோகன் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 51 அரசு மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒரு பள்ளிக்கு, ஒரு முதுகலை ஆசிரியர் என தேர்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென தனியான கலைத் திட்டம் உருவாக்கப்பட்டு வாரம் இருமுறை மாணவர்களுக்கு பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும் வாக்கிற்கிணங்க தமிழ்நாடு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக்க தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப் பெற்ற அற்புதமான திட்டமோ ”நான் முதல்வன்” திட்டமாகும். இதில், 2022-2023ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 5920 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் இன்னும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 1,352 மாணவ, மாணவிகள் உள்ளனர் என்ற விவரங்கள் பள்ளிகளின் மூலம் தகவலின் அடிப்படையில் பெறப்பட்டது.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற இம்மாணவர்களில் ஒரு மாணவர் கூட உயர்கல்வி பெறாமல் இருக்கக்கூடாது என்னும் உணர்ந்த எண்ணத்தில், \”உயர்வுக்கு படி\” என்னும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள 890 மாணவர்களுக்காக இச்சிறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், உயர்கல்வி ஆலோசகர்களின் வழிகாட்டுதல்கள், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் உதவித்தொகை திட்டங்கள், வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும், உங்களின் உயர்வான எதிர்காலத்திற்கு உயர்கல்வி அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

முதற்கட்டமாக நேற்று தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற முகாமில் 26 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 890 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இரண்டாம் கட்டமாக 1.7.2023 அன்று சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள முகாமில், 17 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 462 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ – மாணவிர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை