கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை: குடிநீர் வாரியம் எச்சரிக்கை

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்தல், சுத்தம் செய்தல் மற்றும் அதனை சார்ந்த அனைத்து பணிகளும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடு மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் அடைப்பு குறித்த புகார்களை குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் அழைப்பு மையத்தை 45674567 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.மேலும் பாதாள சாக்கடை பாதுகாப்பற்ற முறையிலும், உரிய கவசங்கள் அணியாமல் சுத்தம் செய்தல் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக கால்வாய்களை சுத்தம் செய்வது குறித்த புகார்களை 14420 என்ற உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் பணியாளர்களை கழிவுநீர் குழிக்குள் இறக்காமல், நவீன இந்திரங்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒப்பந்ததாரர் மூலம் இந்த பணிகளை செய்யக்கூடாது. கழிவுநீர் அடைப்பு ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர், வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களின் உரிமையாளர், தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சுத்தம் செய்யும் பணியாளர்களை தன்னிச்சையாக நேரடியாக ஈடுபடுத்தி கழிவுநீர் குழாயில் வி‌ஷவாயு தாக்கி இறக்க நேரிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.அதாவது, இறந்த பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு முழு பொறுப்பாவார்கள் ஆவார்கள். சட்டங்களை மீறுவோர் மீது இரண்டு ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் வழக்கு பதிவு செய்யப்படும். இறந்த பணியாளர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே கழிவுநீர் அடைப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக கவனத்துடன் செயல்பட எச்சரிக்கப்படுகிறார்கள்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை