கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 18: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு முகாம் 24ம் தேதி நடக்கிறது என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு வரும் 24ம்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம்கள் புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.

இம்முகாம்களில் பொதுமக்கள் அதிகம் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ பிரிவுகளும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் கலந்து கொள்ள திட்டமிடபட்டுள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயூர்வேத சிகிச்சை மருத்துவர்களும் கலந்து கொள்வார்கள்.

இம்முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனையும் வழங்கப்படவுள்ளது. மேலும் முகாமில் கலந்து கொண்டு சிறப்பு மருத்துவர்கள் மூலம் நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு உரிய தொடர் சிகிச்சைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பதிவு பெற்ற முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படும் மருத்துவமனைகள் மூலமாகவும் தொடர் சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் மூலம் வரும் 24ம்தேதி அன்று நடத்தப்பட உள்ள இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை