கர்நாடக அரசு பஸ்சில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் அதிரடி குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஜூலை 8: குடியாத்தம் அருகே கர்நாடக அரசு பஸ்சில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூரில் இருந்து குடியாத்தம் வழியாக செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ்களில் குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து ரேஷன் அரிசி கடத்திச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு- வி.கோட்டா ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடக பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 400 கிலோ எடை கொண்ட 9 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர், அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி குடோனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடியாத்தம் சப்- கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Related posts

திருச்சி, மாநகராட்சியில் 13 வார்டுகளுக்கு மண் அள்ளும் இயந்திரம் வழங்கல்

மணப்பாறை அருகே காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு

வையம்பட்டி பகுதியில் முறைகேடாக பயன்படுத்திய 9 மின் இணைப்புகளுக்கு ரூ.63,482 அபராதம்