கரூர் மாவட்டத்தில் 7,036 மரக்கன்று நட்டு பராமரித்தேன் பிரிய மனமில்லாமல் கோவைக்கு மாற்றலாகி செல்கிறேன்

கரூர் : ஆயுதப்படை டிஎஸ்பியாக பணியாற்றி தற்போது கோவை தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஎஸ்பியாக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள அய்யர்சாமி, கரூர் மாவட்டத்தில் 7ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்ததாக தெரிவித்தார். கரூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக கடந்த 2020 முதல் 2022 வரை 3 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் அய்யர்சாமி (58). இவர், தற்போது கோவை தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஎஸ்பியாக மாற்றதலாகி சென்றுள்ளார். கரூர் மாவட்டத்தில் பணியில் இருந்த காலத்தில் காடுகளின் அளவை பெறுக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். கரூர் எஸ்பி அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காலியிடத்தில் 2,786 மரக்கன்றுகள், மியாவாக்கி முறையில் 2,050 மரக்கன்றுகள், 2,200 பனை விதைகள் என 7,036 மரக்கன்றுகளை நட்டுள்ளார். நம்மாழ்வர் மீது அதிக பற்றுக்கொண்டிருந்த அய்யர்சாமி, கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள அவரது சமாதிக்கு அடிக்கடி சென்று ஆசிபெற்று வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட முறை இங்கு சென்று வந்துள்ளார்.இது குறித்து அய்யர்சாமி தெரிவித்துள்ளதாவது: மதுரைக்கு அருகில் உள்ள கருமாத்தூர் சொந்த ஊராகும். விவசாய குடும்பம். எனக்குள் இயற்கை மீது அதிக ஆர்வம் எப்போதும் உண்டு. படிக்கும் காலத்திலேயே ஊருக்குள் மரக்கன்றுகள் வைப்பது, இயற்கையை ரசிப்பது போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவேன். 1984ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தேன். ஓய்வு நேரத்தில் அவ்வப்போது மரக்கன்றுகளை நட்டு வந்தேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் ஆயுதப்படை பிரிவு டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பணிக்கு வந்தேன். இங்கு வந்து பார்த்த போது, எங்கு பார்த்தாலும் வறட்சி, கடும் வெப்பம் போன்றவற்றை உணர்ந்தேன். ஆயுதப்படை வளாகத்தில் மரங்கள் இருந்தாலும் அனல்காற்று அடித்தது. இந்த பகுதியில் முதலில் பசுமையை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து, மரக்கன்றுகளை நட்டேன். உதவியாக காவலர்களும் இருந்தார்கள். தொடர்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காலியிடங்களில் 300 வேப்பமரங்களை மியாவாக்கி முறையில் நட்டோம். அடுத்தடுத்து எஸ்பி அலுவலக வளாகத்தில் வேம்பு, புங்கன், கொய்யா, மா, சப்போட்டோ என 285 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அந்த இடத்தில் ‘ப’ படிவில் 400 பனை விதைகளை விதைத்துள்ளோம். இதுவரை 7036 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்த பகுதியில் உள்ள கட்டடங்கள், அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள மாடிகளில் பறவைகள் எச்சம் மூலம் விதை விழுந்து முளைத்திருக்கும் 100க்கும் மேற்பட்ட ஆலம், அரச மரக்கன்றுகளை பிடுங்கி வந்து ஆயுதப்படை வளாகத்தில் வளர்த்துள்ளோம்.ஆயுதப்படை வளாகத்தில் அலுவலகத்துக்கு எதிரே உள்ள இடத்தில் மஞ்சள் கரிசாலை, எலுமிச்சை, மருதாணி, வசம்பு, துளசி உள்ளிட்ட 35 வகையான மூலிகை செடிகளையும் வைத்து வளர்த்துள்ளோம். அனைத்து கன்றுகளுக்கும் சொட்டுநீர் பாசனம் முறையில் தண்ணீர் பாய்ச்சும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தோம். உயரதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரும் இந்த செயலுக்கு ஒத்துழைப்பு அளித்ததால் தான் இந்த அளவுக்கு செய்ய முடிந்தது. தற்போது கோவைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறேன். இருந்தாலும், நாங்கள் உருவாக்கிய இந்த மரக்கன்றுகளை பிரிய மனமில்லாமல் கோவைக்கு மாற்றதலாகி செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்