கரூர் மாநாகராட்சி பகுதி ராணி மங்கம்மாள் சாலையில் மெகா பள்ளம்

 

கரூர், ஜூன் 10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கரூரில் இருந்து வாங்கல், நெரூர், புலியூர், பசுபதிபாளையம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கரூர் அண்ணாவளைவு அடுத்துள்ள ராணி மங்கம்மாள் சாலை வழியாக செல்கிறது. இதே போல், இந்த பகுதியில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையின் வழியாக சென்று வருகிறது.

சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் ராணி மங்கம்மாள் சாலையின் மையத்தில் திடீரென 6 அடி ஆழத்திற்கு மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால், இந்த சாலையின் வழியாக சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் செய்வதறியாது நின்றனர். இதனால், இந்த சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், மெகா பள்ளம் ஏற்பட்ட சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து, போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தினர்.

இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் சென்றன. இந்த மெகா பள்ளம் காரணமாக இந்த சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேரிகார்டு வைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பரபரப்பாக வாகன போக்குவரத்து நடைபெற்ற இந்த 5 ரோடு சாலை கடந்த இரண்டு நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை