கண்மாயில் நிறைந்துள்ள கழிவுகளை அகற்ற வழக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவு

 

மதுரை, மே 3: கண்மாயில் நிறைந்துள்ள கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்யையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மீனவ கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாய் முழுவதும் குப்பைகள் நிரம்பி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடையும் உருவாக்குகிறது. கண்மாய் அருகே ஆரம்ப சுகாதார நிலையம், எதிரே அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு நூலகமும் இயங்குகிறது.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதுக்குளம் கண்மாயில் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி, சுகாதாரமான முறையில் பாதுகாக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் ராமநாதபுரம் கலெக்டர் மற்றும் பொதுப்பணி துறையினர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 14க்கு தள்ளி வைத்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை