கடனை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்ததால் முதியவர் தற்கொலை: மாதவரத்தில் பரபரப்பு

சென்னை: வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி, வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் மனமுடைந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதவரம், பஜார் தெருவை சேர்ந்தவர் கஜபதி (64). இவரது மனைவி சண்முகசுந்தரி. தம்பதிக்கு, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கஜபதியுடன் வசிக்கும் தாய் நவநீதம்மாள், கடந்த 2003ம் ஆண்டு வித்யா என்பவரிடம் ₹2 லட்சம் கடன் பெற்றுள்ளார். அப்போது, வித்யா ஒரு பத்திரத்தில் நவநீதம்மாளிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துள்ளார். பின்னர், வித்யா அந்த பத்திரத்தை நவநீதம்மாளுக்கு தெரியாமல் தாட்கோ வங்கியில் வைத்து ₹9.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.கடந்த 2009ம் ஆண்டு இதுபற்றி அறிந்த கஜபதி, வித்யா மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வித்யா மீது மோசடி வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்கு அசலும், வட்டியும் செலுத்தாததால் வங்கி நிர்வாகம், நவநீதம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதை செலுத்த முடியாத கஜபதி மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், வங்கி அதிகாரிகள் நேற்று முந்தினம் காலை மாதவரம் பஜார் தெருவில் உள்ள கஜபதிக்கு சொந்தமான கடை மற்றும் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதனால், மேலும் மனமுடைந்த கஜபதி நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.அப்போது, அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும், தங்களை ஏமாற்றிய வித்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கஜபதி உடல் பிரேத பரிசோதனைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது