கஞ்சா வியாபாரிகள் வேட்டை தீவிரம் குமரியில் ஒரே நாளில் 4 சிறுவர்கள் உள்பட 16 பேர் அதிரடி கைது-பலர் தலைமறைவு

கருங்கல் :  குமரியில் நேற்று ஒரே நாளில் கஞ்சா விற்பனை தொடர்பாக 4 சிறுவர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே கடந்த 24ம் தேதி கஞ்சா கும்பல் இடையே நடந்த மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்து வருகிறார்கள். கடந்த இரு நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருங்கல்: இந்த நிலையில் கருங்கல் அருகே எட்டணி பகுதியில் கஞ்சா கும்பல் முகாமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. மோகன அய்யர் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவை தலா 10 கிராம் பொட்டலங்களாக இருந்தன. பிடிபட்ட 2 பேரிடம் நடந்த விசாரணையில், அவர்கள் திப்பிரமலையை சேர்ந்த சாஜன் (22), மாங்கரையை சேர்ந்த அரி கிருஷ்ணன்(23) என தெரிய வந்தது. இவர்களிடம் நடந்த தொடர் விசாரணையில், எட்டணி அருகே  7 பேர் கொண்ட மற்றொரு கஞ்சா கும்பல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த 7 பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பள்ளியாடி பழைய கடை பகுதியை சேர்ந்த ஆன்றனி சுஜின் (21), விரிகோடு மகேஷ் (25), எட்டணி குருசடி பகுதியை சேர்ந்த ஜெகன் (25) மற்றும் 4 பேர் சிறுவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதில் சிறுவர்கள் 4 பேரும் கஞ்சா வாங்க வந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார்,  ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் விசாரணைக்கு பின் 4 சிறுவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகள் மற்ற 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உதவியுடன் கஞ்சா விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.கன்னியாகுமரி:  இதுபோல் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் கன்னியாகுமரி எஸ்.ஐ. விஸ்வாம்பரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர், போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றனர். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ரகு (எ) ரகுபாலன் (23) என்பதும், கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ரகுவை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மார்த்தாண்டம்:  மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் போலீசாருடன் சென்னித்தோட்டம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்த விரிகோடு காட்டுவிளையை சேர்ந்த சுஜித் (20) என்பவரிடம் விசாரித்த போது அவர் கஞ்சா வியாபாரம் செய்வது தெரியவந்தது. அவரிடம் ஒன்றே கால் கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சுஜித்தை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.குளச்சல்:  குளச்சல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில், துறைமுகம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தேகப்படும் படியாக 3 பேர் நின்றனர். அவர்களை பிடித்து விசாரித்த போது கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜெனிலன் (22), அருளன் (22), சதீஷ் (21) என்பது தெரிய வந்தது.  மேலும் சட்ட விரோதமாக 1.250 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். களியக்காவிளை:  களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் கோழிவிளை, மருதங்கோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, ஒற்றாமரம் நடுவிளை வீடு பகுதியை சேர்ந்த மன்சூர் (25) என்பவரிடம் விசாரித்த போது அவர் 1.250 கிலோ கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில், மன்சூரிடம் விசாரணை நடத்தினர். பூதப்பாண்டி போலீசார் அழகியபாண்டிபுரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது செம்பொன்விளையை சேர்ந்த  அபிலாஸ் (22) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவர் 1.250 கிலோ கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அபிலாஸை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளதால் பலர் தலைமறைவாகி உள்ளனர். காவல் நிலையம் வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. …

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது