கஞ்சா கடத்திய மூதாட்டிக்கு சிறை தண்டனை

திண்டுக்கல் ஆக. 9: கன்னிவாடியை சேர்ந்த கஞ்சா கடத்திய மூதாட்டிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வத்தலக்குண்டு அருகே சிலர் கஞ்சா கடத்துவதாக, 2014ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் வத்தலகுண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டி பிரிவு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூதாட்டியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் கன்னிவாடி தெத்துப்பட்டியை சேர்ந்தவர் தண்டபாணி என்பவரது மனைவி மாயக்காள் (65) என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.0 இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா, இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி ஆகியோர் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தினர். அரசு வழக்கறிஞர் விஜயபாண்டியன் வழக்கை நடத்தினார். இதன் முடிவில் மாயக்காள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி