ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கண்டெய்னர் லாரி திருட்டுபோன 2 மணி நேரத்தில் மீட்பு

*அவளூர் போலீசார் அதிரடிகாவேரிப்பாக்கம் :  ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ₹8 லட்சம் மதிப்பிலான கண்டெய்னர் லாரி திருட்டுபோன 2 மணி நேரத்தில் அவளூர் போலீசார் அதிரடியாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(29), கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் உதிரிபாகங்கள்  ஏற்றுவதற்காக, நேற்று காலை ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரியை சென்னை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பஸ்டாப் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு, அருகே உள்ள உத்திரம் பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் 11மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, கண்டெய்னர் லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.இதுதொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவர் ராஜேஷ் நேற்று அவளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கண்டெய்னர் லாரியை தேடி சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது கண்டெய்னர் லாரியை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி நிறுத்தினர்.  பின்னர் அதன் ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ₹8 லட்சம் மதிப்பிலான கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  கடலூர் மாவட்டம் வடலூர் கிராமம் காட்டுக்கொள்ளை வாசிம் நகரைச் சேர்ந்த செல்வம் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டுபோன கண்டெய்னர் லாரியை இரண்டு மணிநேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்