ஒவ்வொரு தேர்தலின்போதும் சென்றாயபெருமாள் தரிசனம்: எடப்பாடி பழனிசாமியின் சென்டிமென்ட்; கைகொடுக்குமா…? ஏங்கும் வேட்பாளர்கள்

சேலம்: மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு தேர்தலின்போதும் தனது பிரசாரத்தை சொந்த தொகுதியில் இருந்து தொடங்குகிறார். அதுவும், தனது தொகுதிக்குட்பட்ட பெரியசோரகையில் இருக்கும் சென்றாயபெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை மேற்கொள்கிறார். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் சேலத்திற்கு புறப்பட்டு வந்தார். சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் தங்கிய அவர், நேற்று காலை நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து புறப்பட்டு, பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கு 10.30 மணிக்கு சாமி தரிசனம் செய்தார். கோயிலை சுற்றி வலம் வந்த அவர், நேரடியாக பிரசாரத்தை தொடங்க நங்கவள்ளிக்கு சென்றார். தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை நடத்தி, தனது தேர்தல் பிரசாரத்தை அங்கு தொடங்கினார். இடைப்பாடி தொகுதியில் இதற்கு முன் போட்டியிட்டபோதும், கடந்த முறை முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியபோதும் இதே சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். அவரது பெருமாள் சென்டிமெண்ட், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கைகொடுக்குமா என்று களமிறங்கியுள்ள அதிமுக வேட்பாளர்கள் ஏங்கி நிற்கிறார்கள். முதல் பிரசார கூட்டத்தில், எடப்பாடி சொன்ன அனைத்து வியூகங்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று வேட்பாளர்கள் பேசி சென்றனர். கடந்த தேர்தலில், எடப்பாடியின் சென்டிமென்ட் எடுபடாமல் போய்விட்டது, இந்த முறை நமக்காவது ஒர்க்கவுட் ஆகுமானு சில வேட்பாளர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…